வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உதவித்திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் இலக்குகளை அடைய முடியவில்லை என சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த நிலையினுள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் பல முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள அதேவேளை இத்திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாவல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பொருளாதார பாதிப்பால் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நிவாரண திட்டம் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஏழ்மையில், அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் கொண்டுவரப்படுவதாகவும் இந்த உதவித் திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை நேரடியாக குறிவைக்கிறதா என்பது சந்தேகமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி, தேர்தல் ஒன்று அவசியமில்லை என மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.