ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை எனவும், அவர் சர்வதேச சமூகத்திற்கு பொய் சொல்கிறார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ்த் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டாலும் காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் இருப்பதாலேயே மக்கள் அதனை நிராகரித்துள்ளனர் என்றும் காணி விடுவிப்பில் எதுவும் முழுமையாக நடைபெறாத நிலையில் லண்டனில் ரணில் விக்ரமசிங்க பொய்யுரைத்துள்ளார் என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் காலக்கெடுக்களை கூறி தீர்வு வரும் என ஏமாற்றும் ஜனாதிபதியின் உத்திகளை கண்டு ஏமாறாமல், சர்வதேச சமூகம் உண்மைய நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் பேச்சுவாரத்தைக்குச் சென்ற சம்பந்தன், அவர் ஏமாற்றியதாக தெரிவித்துள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது லண்டன் பேச்சில் தெரிவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.