யாழில் 9 ஆம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு யூலை 1ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்மானம் யாழ் மாவட்ட செயலகத்தினால் அண்மையில் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு யாழ் வணிகர் கழகம், மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில் இத்திட்டம் அமுலுக்கு வருமாக இருந்தால் யாழ் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளில் மேலும் பின்னடைவு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
அத்துடன் எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் பின்நோக்கிச் செல்வதற்கு நாமே காரணமாகி விடுவோம்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை அமைச்சரவையில் அப்போதிருந்த கல்வியமைச்சரால் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் தடைசெய்ய வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அமைச்சரவையில் பாரிய எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த விடயம் கைவிடப்பட்டதை நாம் அறிவோம்.
மேலும், இலங்கையில் எந்த மாகாணத்திலும் இப்படியான நடைமுறைகள் இல்லாத போது நாம் மட்டும் இதனை அமுல் படுத்தினால் அது எமது மாகாணக் கல்விப் பின்னடைவுக்கு வழிவகுப்பதாக அமையும்.
ஆகவே மேற்குறிப்பிட்ட விடயங்களை தங்கள் கவனத்தில் எடுத்து தாங்கள் மேற்கொண்ட தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பூரண ஆதரவினை வழங்கியுதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதே வேளை தனியார்கல்வி நிலையங்களில், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், மாணவர்களுக்கு சமய சம்பந்தமாகவும், ஒழுக்கக்கல்வி, மற்றும் சமூகம் சம்பந்தமாகவும் 15நிமிடம் தொடக்கம் 30நிமிடம் வரை கற்பிக்க வேண்டும் என்று தாங்கள் எடுத்த தீர்மானத்தினையும் நாம் வரவேற்கின்றோம் ’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.