ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரித்தானியாவுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவும், இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை எனவும் 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பிறகு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மலையகத்திலிருந்து செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட விடயம் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.