நலன்புரிக் கொடுப்பனவுகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடித் தீர்மானமொன்று எட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நலன்புரிக் கொடுப்பனவுச் செயற்றிட்டம் தொடர்பில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட திட்டம் நல்ல பயனுள்ள திட்டமாகும்.
அதற்காக ஜனாதிபதி கிராமம் கிராமமாக சென்று பதிவு எடுக்கமுடியாது. அதனால் அந்த பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே உள்ள சமுர்த்தி பட்டியலை எடுத்து அதில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டோர், முதியோர் பெயர்களை தெரிவுசெய்து அதன் பின்னர் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு பதிவு செய்து அதன் பின்னர் ஏனையவர்களை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆனால் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்பற்று மேற்பார்வை செய்யாமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கிராமசேவகர் சமுர்த்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி இந்த வேலைத்திட்டத்தினை செய்ய விடாமல் பூதாகாரமாக்கி உள்ளனர்.
இந்த திட்டத்தினை ஆழமாக ஆராய்ந்தால் இதனுடன் கொண்டு வரப்பட்ட பிழையான தகவலை தரும் அரச உத்தியோகத்தர்களுக்கு 10000 ரூபா தண்டம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை என்ற சட்ட நடைமுறையை நீக்க வேண்டும் என இந்த தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர்.
இதனால் மக்கள் அவர்களைப் பற்றி தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே ஜனாதிபதி ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போது விடுபட்ட பயனாளிகளை மீள இணைப்பதற்கான அழுத்தத்தினை கொடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.