உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொது நிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பை ஏற்படாது.
கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்திலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
உள்ளுர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் உட்பட நாட்டின் வங்கி முறையின் ஸ்திரத்தன்மையையோ அல்லது எந்தவொரு பொது அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையோ பாதிக்காது
நாட்டிலுள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகை எதுவும் பாதிக்கப்படாது என்பதோடு தற்போது வங்கி வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் வட்டியையும் இந்த நடைமுறை பாதிக்காது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.