உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, எதிர்க்கட்சிகள் எவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக ஆராயந்தோம்.
ஊழியர் சேமலாப நிதியத்தில் இரண்டரை மில்லியன் கணக்குகள் உள்ளன.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு, இந்த கணக்குகளில் அரசாங்கம் கை வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பெறுமதி உயர்வடைந்து, ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இப்போதுகூட ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்த மூன்றில் ஒரு வீதமான கணக்குகள் இல்லாமல்தான் போயுள்ளன.
இவ்வாறு இருக்க, தற்போது மீண்டும் ஊழியர் சேமலாப நிதியத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கை வைக்க முயற்சித்து வருகிறது.
இதனை சரியென காண்பிக்க எத்தனைக் கதைகளை அரசாங்கம் கூறினாலும், நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களைத்தான் அது பாதிக்கும்.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று ஆளும் தரப்பினர் இதுவரை கூறிவந்த நிலையில், தற்போது அதற்கு மாறாக இவர்கள் செயற்படுகிறார்கள்.
எனவே, எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்காக இந்த விடயத்தை அணுக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.