அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில், இன்று அவரது அமைச்சில் நடைபெற்றது.
இ.தொ.காவின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், உப தலைவர் பாரத் அருள்சாமி, தொழிற்சங்க துறைக்கான தேசிய அமைப்பாளர் லோகதாஸ் மற்றும் பணிமனை அதிகாரிகளும், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், அரச பெருந்தோட்ட யாக்கம் ஆகியவற்றின் சார்பில் அவற்றின் பிரதானிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். அமைச்சுகளின் செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்து தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்தார்.
அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்துக்கு 10 பேர்சஸ் காணி, தேயிலை மீள் பயிரிடல் பற்றியும் இதன்போது கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளன.
இவ்விவகாரங்கள் தொடர்பில் அரச பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை, பாரத் அருள்சாமியிடம் காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது.