யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார்.
2015 – 2019 ஆட்சியில் வலி வடக்கின் பெரும்பாலான காணிகளை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்து கையளித்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் மக்களது காணிகள் தொடர்பாக அவர் இச்சந்திப்பில் கேட்டறிந்தார்.
விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக விளக்கங்களை வலி வடக்கு பிரதேச செயலாளர் சிவஸ்ரீ இக்கலந்துரையாடலில் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பலாலி, மயிலிட்டி, வசாவிளான் மீள்குடியேற்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார்.