தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 03 வருடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களில் தொழிற்கல்வி பாடநெறிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த கடன் திட்டத்தின் கீழ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதற்காக தகுதி வாய்ந்த 5,000 மாணவர்கள் இன்று முதல் அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்களின் எண்னிக்கை அதிகரித்தால் பரீட்சையின் மதிப்பெண் முறையை பயன்படுத்தி இந்த வட்டியில்லா கடனுதவி வழங்க நடவடிக்கை எடுப்போம்.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அரசாங்க வட்டியில்லா கடன்களுக்கான விண்ணப்பங்களை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். அத்தோடு அதில் இது பற்றிய தகவல்களைப் பெறலாம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.