இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது.
அறிவு, வழிகாட்டல் மற்றும் ஞானம் ஆகியவற்றைத் தரும் ஆன்மீக நெறியாளர்கள் அல்லது குருமாரைக் கௌரவிக்கும் முகமாக இந்தியாவில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா பண்டிகைக்கு சமாந்தரமாக எசல போயா தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இப்போயா தினத்திலேயே இந்தியாவின் சர்நாத்தில் புத்தபெருமான தனது முதலாவது பிரசங்கத்தை நடத்தியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
புத்தபெருமானின் வாழ்வின் முக்கிய அம்சங்களையும் இந்தியாவிலுள்ள முக்கிய பௌத்த தலங்களையும் காண்பிக்கும் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அத்துடன் நூற்றாண்டுகளுக்கும் அதிக காலம் பழைமை வாய்ந்த சிற்பங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அசாஜி தேரர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்தியாவின் பௌத்த மரபினைப் பிரதிபலிக்கும் இவ்வாறான பல கண்காட்சிகள் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வருவதுடன் அண்மையில் வெசாக் மற்றும் பொசன் போயா தினங்களின்போதும் முறையே சீமாமாலகய மற்றும் ஹோமாகம பொசன் வலயங்களில் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.