தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கலைத்துவ மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பொருட்கள் காணாமல் போயின.
இந்நிலையில் அரசாங்கத்தின் சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் யாரிடத்திலேலும் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
மேலும் இது பற்றிய தகவல்களை அறிந்திருப்பின் 0112354354 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்ட அவர் , தேசிய பெறுமதிமிக்க உத்தியோகபூர்வ சின்னத்தை தேடியறிவதற்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கும் தமது பாராட்டினைத் தெரிவித்தார்.