நிலாவெளி உல்லாசப் பிரயாணிகளின் படகு சேவை மற்றும் கூட்டுறவு சங்கத்தினரால் இன்று நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சங்கத்தில் அல்லாத ஒருவர், தனிப்பட்ட முறையில் இணையதளம் ஊடாக புறாமலைத் தீவினை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களது முன்பதிவினை பெற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் படகு சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் இதன் காரணமாக குறித்த சங்கத்தின் அங்கத்தவர்கள் பாதிப்படைகின்றனர் எனவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக அந்நபரிடம் வினவிய போது சங்க அங்கத்துவம் பெற தாம் முயற்சி செய்ததாகவும் எனினும் தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், பொது வேலை ஒன்றுக்கு சங்கம் என்ற போர்வையில் முட்டுக்கட்டை இடுவது பொருத்தமற்ற செயல் எனவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்றைய தினம் திருகோணமலை நிலாவெளியில் இருந்து புறாமலைத்தீவிற்கு செல்லும் படகு சேவை பல மணி நேரம் தாமதமாகியதுடன் ஸ்தலத்திற்கு வருகைதந்த பொலிஸாரால் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டது.