அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை. 2024 தேர்தல் ஆண்டு தேர்தல்கள் ஆண்டாக கருதப்படும். 2024 முதல் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
அதற்கு இப்போது தயாராகி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவை 2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணை மூலம் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
தற்போதைய அரசியல் தலைமையினால் இந்த நாட்டை உருவாக்க முடியாது என்று நாங்கள் வெளியே வந்து கூறினோம். பொதுவாக, உலகில் ஒரு நாடு வீழ்ச்சியடைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அதனை பொறுப்பேற்பதே நியதி.
ஆனால் இலங்கையில் அதனை ஏற்றுக்கொள்ளும் முதுகெலும்பு உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இருக்கவில்லை.
அவர் ஓடி ஒளிந்து கொண்டார். அதனால்தான் ஆசையும் பயமும் கலந்த ஒரு உணர்வு ஏற்பட்டது. வீழ்ந்த நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்து சிந்துக்கும் போதே அவர் பயந்தார்.
அதேபோல அனுரகுமார திசாநாயக்க இந்த நாட்டுக்கு மாற்றுவழி அல்ல. அவரிடம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்று கேட்ட போது நாட்டிலுள்ள சொத்துக்களை விற்று நாட்டுக்கு டொலர் கொண்டு வர முடியும் என்று கூறுகின்றார்.
அவர் நாட்டுக்கு சிறந்த தலைவர் இல்லை என்பதை கடந்த காலங்களில் நிரூபித்து காண்பித்தார்” என அவர் மேலும் தெரிவித்தார்.