பசுமை ஹைட்ரஜன் எரிசக்தி இந்தியாவை எரிசக்தி வழங்குபவராகவும் ஏற்றுமதியாளராகவும் மாற்றும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கணிசமான தேவை மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து சேமித்து வைக்கும் திறன் இந்தியாவிற்கு இருப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக இதற்கு என 200 பில்லியன் டொலர் செலவு செய்யும் இந்தியா, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 300 பில்லியன் டொலரை ஏற்றுமதி நன்மையாக பெற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லியில் இடம்பெற்ற புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2023 ஆம் ஆண்டுக்கான பசுமை ஹைட்ரஜன் சர்வதேச மாநாட்டின் நிறைவு நாளில் ஹர்தீப் சிங் பூரி இதை கூறியுள்ளார்.
ஏழு முழுமையான அமர்வுகள், 16 தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் நான்கு குழு விவாதங்கள் என மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த மாநாட்டில் 2,700 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 135 பேச்சாளர்கள் பங்குபற்றினர்.
இந்த திட்டத்தில் நிதியளிப்பதில் சவால்கள் இருந்தாலும் இதன் தேவையை உணர்ந்து இந்த திட்டத்திற்கு வங்கிகள் சுதந்திரமாக நிதியளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக முன்னணி நிதி நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் முதலீடு செய்ய தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரஜன் கூட்டணியில் சேர, ஐரோப்பிய முதலீட்டு வங்கி முறையாக ஒப்புக்கொண்ட நிலையில் இது 1 பில்லியன் யூரோக்கள் நிதியுதவியுடன் பெரிய அளவிலான தொழில்துறை மையத்தை உருவாக்க ஆதராக அமைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி சமீபத்தில் பசுமை வளர்ச்சிக்கான இந்தியாவின் அபிலாஷைகளுக்கு உதவுவதற்காக ஐந்து ஆண்டுகளில் 20 முதல் 25 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அத்தோடு இந்தியாவின் குறைந்த கார்பன் மாற்ற பயணத்திற்கு ஆதரவாக 1.5 பில்லியன் டொலர் நிதியுதவிக்கு உலக வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பசுமை ஹைட்ரஜனின் விலையை தற்போது 4.5/kg இலிருந்து 1/kg ஆக 2030க்குள் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஷெர்பா அமிதாப் காந்த், பசுமை ஹைட்ரஜனுக்கு மாறுவதில் எரிபொருள் நிறுவனங்களும் சுத்திகரிப்பு நிலையங்களும் முன்னணியில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீல ஹைட்ரஜனையோ அல்லது வேறு ஏதேனும் ஹைட்ரஜனையோ பயன்படுத்துமாறு பல நாடுகளும் தொழில்துறையினரும் கோரிக்கை விடுத்தாலும் இந்தியா பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை கைவிட கூடாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
மற்ற நாடுகள் சந்தையை கைப்பற்றுவதற்கும், முதலிடத்தைப் பெறுவதற்கும் முன்னர், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியா வேகமாக செயற்பட வேண்டும் என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட குறைந்தது 16 நாடுகள் ஏற்கனவே தங்கள் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான தேவை 2050 க்குள் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்த திட்டத்திற்கு ஊக்கத்தொகையாக 17,490 கோடி ரூபாய் உட்பட ஆரம்ப செலவாக 19,744 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஜனவரி 4 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியது.
இந்த முயற்சியானது கார்பன் டை ஒக்சைடு வெளியேற்றத்தை ஆண்டுக்கு 50 மெட்ரிக் டன் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.