இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை பிரதமராக்க முயற்சி செய்ததாக பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசாந்தா சமீபத்தில் கூறிய கருத்து தொடர்பான சர்ச்சையில் இந்தியாவை இழுக்கக் கூடாது என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.ஒலி, தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசாந்தா, சிங் ஒருமுறை தன்னைப் பிரதமராக்க முயற்சி செய்தார், பல முறை டெல்லிக்கு சென்று பிரதமராக்க காத்மாண்டுவில் அரசியல் தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.
நேபாளத்தில் டிரக்கிங் தொழிலதிபர் சர்தார் ப்ரீதம் சிங், குறித்து பிரதமர் பிரசாந்தா கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.ஒலி இதனைத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசாங்கத்தினை அமைப்பதில் தலையிடுவது நேபாளத்தின் இறையாண்மையை மீறும் செயல் என்பதை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது என்றும் ஆகையால் இந்தியா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாது என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை தொழிதிபர் சர்தார் ப்ரீதம் சிங் நிராகரித்துள்ள போதும் கடந்த வாரத்தின் மூன்று நாட்களாக பாராளுமன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் கே.பி.ஒலி கூறியுள்ளார்.