சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமுலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பின்னர் அவரைக் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி. சி.வி.கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது.
விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் ஆதரங்களுடன் முன்வைக்கட்டும் என்றும் அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அமுலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியற் மனு தாக்கல் செய்திருந்தது.
நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.