அண்மைக்காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டையிலிருந்து புதிதாக பொரித்த 13,500 குஞ்சுகளையாவது வழங்குமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் (AIPA) அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவற்றை தமது சங்கத்தின் ஊடாக கிடைக்கச் செய்யுமாறும் கோரியுள்ளது.
இரண்டு தடவைகளில் 70,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அந்த முட்டைகள் அரசுக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சங்கத்தின் ஆலோசகர் மாதலி ஜயசேகர தெரிவித்தார்.
“21 நாட்களுக்குப் பின்னர், முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும், அந்தக் குஞ்சுகள் கோழிப் பண்ணையாளர்களிடையே விநியோகிக்கப்படும். இதை தலா 13,500 வீதம் நான்கு தொகுதிகளில் செய்யலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கோழிப் பண்ணைகள் அதிக அளவில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, சிறிய அளவிலான கோழிப்பண்ணைகளில் புதிதாக குஞ்சு பொரித்த 13,500 குஞ்சுகளையாவது விநியோகிப்பதற்கான வாய்ப்பை அமைச்சர் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஞ்சுகளை விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்குமாறும், குஞ்சுகளை 450 ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், கறுப்பு சந்தையில் 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
எனவே நலிவடைந்து வரும் கோழிப்பண்ணை தொழிலை மேம்படுத்த குறைந்த பட்சம் இந்த கோழி குஞ்சுகளை சலுகை விலையில் வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.