தேங்காய்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கு இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை வைத்து நுகர்வோருக்கு தேங்காய்களை விற்பனை செய்வதே பிரதான காரணம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், விவசாயிகள் வழங்கும் தேங்காய்களின் விலைக்கும் சந்தையில் தேங்காய்களின் விலைக்கும் அதிக வித்தியாசம் காணப்படுவதாகவும், தற்போது இடைத்தரகர்கள் கட்டுப்பாடின்றி தேங்காய் விலையை கையாள்வதாகவும் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார் .
தென்னைச் செய்கையாளர்களிடமிருந்து 50 – 55 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் பெறப்படும் ஒரு தேங்காய் கொழும்பு போன்ற நகரப் பகுதிகளில் 100 – 120 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்படும் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்று 57 – 60 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகபட்ச விலை சுமார் 63 ரூபாவாக உள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.
தேங்காயின் விலையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தென்னை விவசாயிகளுக்கும் விற்பனையாளர்களுக்கும் இடையில் முறையான தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார் .