யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது ,” பாடசாலையில் மேலதிக வகுப்பு நடாத்தியதாகவும் , இதன் போது , ஒரு விடயத்தை மூன்று தடவைகள் விளங்கப்படுத்திய போதும் குறித்த மாணவிக்கு அதனை விளங்கிக்கொள்ள முடியாமல் போனதால் நிதானம் இழந்து , மாணவியை அடித்தேன் என மன்றில் அவர்தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ” நிதானம் இழப்பதும் ஒரு வகை நோயே , அதற்கு உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்திய நீதவான் , 05 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அதிபரை அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை , மாணவியை தாக்கிய அன்றைய தினம் ,குறித்த மாணவி உள்ளிட்ட 09 மாணவிகளை அதிபர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.