தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பங்கேற்கப்போவதில்லை என தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15ஆவது உச்சி மாநாடு வரும் ஓகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்கில் நடைபெறவுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் முதன்முறையாக இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாத்திரம் இந்நிகழ்வில் கலந்துகொள்ளமாட்டார் என தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
எனினும், ரஷ்ய கூட்டமைப்பு சார்பில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின்(Cyril Ramaphosa) அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உக்ரேன் – ரஷ்யாவுக்கிடையே போர் தொடங்கியது முதல், உலக நாடுகள் பலவும் ரஷ்யாமீது தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், உக்ரேனிலிருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடு கடத்திய குற்றத்திற்காகவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் புடின் இம்மாநாட்டில் கலந்துகொண்டால், போர்க் குற்றங்களுக்காக தென் ஆபிரிக்காவில் வைத்து அவா் கைது செய்யபடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.