மணிப்பூரில் கும்பலொன்று இருபெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று,பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இரத்தத்தை உறைய வைக்கும் குறித்த வீடியோ கடந்த புதன் கிழமை வெளியாகியிருந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் முக்கிய குற்றவாளியான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங்கின் வீடும் மர்ம நபர்களால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில்கடந்த இரண்டரை மாதங்களாக மெய்தேய் என்ற பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும், குகி என்ற பழங்குடி இனத்தைச்சேர்ந்த சிறு பான்மை மக்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகின்றது.
இதன்காரணமாக பல வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதிகளில் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் இதுவரை 140இற்கும் மேற்பட்டோர் இவ் வன்முறைச் சம்பவங்களினால் உயிரிழந்துள்ளனர் எனவும் இதில் குக்கி பழங்குடியினரே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த கும்பலொன்று பி பைனோம் என்ற கிராமத்தில் உள்ள குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது தப்பியோடிய இரு பெண்களைப் பிடித்த அக்கும்பலானது அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமான அழைத்துச்சென்றதோடு அவர்களை வயல்வெளியொன்றுக்கு அழைத்துச்சென்று அவர்கள் மீது பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்வீடியோவானது கடந்த புதன் கிழமை வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இக் கொடூர சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்து வருகின்றனர்.
இதனையடுத்து குறித்த பெண்களைக் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த நால்வரைப் பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் மோடி கருத்துத் தெரிவிக்கையில் ”மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் எனது இதயம் சோகத்தில் முழ்கியுள்ளது. இச் சம்பவம் வெட்கக்கேடானது. அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்படமாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதே வேளை இது குறித்து தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்துத் தெரிவிக்கையில் “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவை வெறுப்பும் விஷமமும் வேரோடு பிடுங்கி எறிகிறது. மணிப்பூரில் நிகழும் இத்தகைய கொடூர வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் பலபகுதிகளில் இச்சம்பவத்தைக் கண்டித்து பாரிய போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.