அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்றும் மேலும் மூன்று பேர் இதில் காயமடைந்தனர் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி, உக்ரைன் தாக்குதல் நடத்திய இடங்களில் செய்தி சேகரிக்க சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஊடகவியாளரின் மரணம் மேற்கத்திய சக்திகள் மற்றும் உக்ரைன் செய்த கொடூரமான, திட்டமிடப்பட்ட குற்றம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சும் கடுமையாக சாடியுள்ளது.
ரஷ்ய அமைப்புகளுக்கு எதிராக கொத்தணி குண்டுகளை உக்ரேன் உரிய முறையில் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜான் கிர்பி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.