முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்து, நுகர்வோர் அதிகார சபையால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நுகர்வோர் அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின் மூலம் ஏப்ரல் 19 ஆம் திகதி முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட விலை நிர்ணயம் இனிமேல் பொருந்தாது.
வர்த்தமானியின் படி, எடையின் அடிப்படையில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகளின் அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஒரு வெள்ளை முட்டை அதிகபட்ச விலை 44 அல்லது ஒரு கிலோகிராம் 880 ரூபாய்க்கு மிகாமலும் அதே நேரத்தில் பழுப்பு முட்டை 46 அல்லது ஒரு கிலோகிராம் 920 க்கு விற்கப்பட வேண்டும்.
வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும், நாட்டில் முட்டை தட்டுப்பாடு நிலவியதோடு அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் இந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சந்தைக்கு விடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.
இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும்.
ஒரு முட்டையின் விலை 35 ஆக இருக்கும் அதே சமயம் பொதியிடப்பட்ட முட்டை40 ரூபாயாக இருக்கும் என்றும் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.