விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மெலும் தெரிவிக்கையில்,
“வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் ‘ஈ-பேருந்து’ முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இங்கு மின்சார பேரூந்துகளை தயாரிப்பதற்கு தற்போது அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது கட்டணங்களை பண அட்டை மூலம் செலுத்தக் கூடிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
பழமையான மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக 13 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வாகன இறக்குமதியின்போது இடம்பெறும் பல்வேறு மோசடிகளைத் தவிர்க்க ‘ஈ மோட்டரிங்’ என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
இதன் ஊடாக வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் முழுமையாக கிடைக்கும்.
மேலும், விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான அடிப்படைப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை நமது நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தற்போது போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.