கடந்த ஆண்டில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், அடுத்த நாடாளுமன்ற அமர்வில் விவாதம் ஒன்று கோரப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, இது தொடர்பில் எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தின் போது, விளையாட்டுத்துறை அமைச்சரிடம் குறித்த மோசடி விவகாரம் தொடர்பில் வினவவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் போது, இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்காக மாத்திரம் 67 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா 11.7 மில்லியன் ரூபாவும், செயலாளர் மொஹான் டி சில்வா 5.4 மில்லியன் ரூபாவும், உப தலைவர்களான ஜயந்த தர்மதாஸ 5.1 மில்லியன் ரூபாவும், ரவின் விக்ரமரட்ன 4.7 மில்லியன் ரூபாவும், பொருளாளர் லசந்த விக்ரமரட்ன 4.8 மில்லியன் ரூபாவும், உதவி செயலாளர் சுஜீவ கொடலியத்த 4.7 மில்லியன் ரூபாவும், உதவி செயலாளர் கிரிஷாந்த கபுவத்த 3.6 மில்லியன் ரூபாவும் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கு செல்ல 32 வீரர்கள் உள்ளிட்ட 52 பேருக்கான விசா அனுமதியை இலங்கை கிரிக்கட் கோரியிருந்தது.
எனினும் அவர்களில் இலங்கை கிரிக்கட்டுடன் தொடர்பில்லாத 35 பேர் உள்ளடங்கியிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.