13வது திருத்தத்தினை 35 வருடங்களுக்குப் பின்னர் அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான களம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமோ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமோ அல்ல பிரச்சனைக்குரிய மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இன்று இலங்கையை பொறுத்தவரையில் ஒரு பொன்னான நாள் 88 ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை 35 வருடங்களை தாண்டி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பல பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று இந்த 35 வருடங்களை விட இன்று ஜனாதிபதி இந்தியாவுக்கு கடந்த வாரம் சென்று இந்திய ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் பேச்சு வார்த்தை நடத்தி அதில் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஒரு வலுவான அதிகார பரவலாக தமிழர்களுக்கு சாதகமாக செய்ய வேண்டும் என இந்தியா கூறுகின்ற நிலையில் ஜனாதிபதி அவர்கள் இன்று கொழும்பில் சகல கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஒரு வரவேற்கத்தக்க விடயம்.
இலங்கை இந்தியா ஒப்பந்தம் என்பது ஏற்கனவே இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயம் இதில் தமிழ் தலைவர்கள் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும். பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் ஏற்கனவே அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஆகும் அதில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான சம்பந்தப்பட்ட விடயங்கள் தான் சில முரண்பாடுகள் காணப்படுகின்றது.
நடைமுறை படுத்துவது தொடர்பான விடயங்களில் காணி தொடர்பான விடயங்கள் பொலிஸ் தொடர்பான விடயங்கள் அமுல்படுத்துவதா இல்லையா என சிங்கள தேசியவாதம் தமிழ் மக்கள் தொடர்பாக நம்பிக்கையீனம் காரணமாக பல கருத்துக்களை முன்வைக்கின்ற நிலையில் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் ஊடாக இன்று கொழும்பில் தமிழ் தலைமைகளை ஜனாதிபதி அழைத்து பேசுவது என்பது ஒரு பொற்காலம்.
இந்த விடயத்தில் ஏற்கனவே உள்ள விடயங்களை அமுலாக்குவதற்கு தமிழ் தலைமைகள் தவறி விடக்கூடாது தமிழ் தலைமைகளை பொறுத்தவரையில் இன்றைய பேச்சு வார்த்தை ஊடாக 13 வது இல் உள்ள விடயங்களை அமல்படுத்துவதற்கு சரியான ஒரு செயல் வடிவத்தை கொடுக்க வேண்டும்.
35 வருடங்களின் பிற்பாடு இவ்வாறான ஒரு விடயம் வருவது என்பதனை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இதை நாங்கள் மருதழிக்கும் பட்சத்தில் சிங்கள தேசியவாதத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் இது நிராகரிக்கப்பட வேண்டும், இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, இது தனி நாட்டை கூறுகின்ற ஒரு செயல் வடிவாகவும் என கங்கணம் கட்டிக்கொண்டு இதை குழப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் தருவாயில் தமிழ் தலைமைகளும் இதனை நிராகரிக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் எட்டப்படாத நிலை பல வருட காலத்திற்கு ஏற்படும் என்பதனை மறந்து விடக்கூடாது.இதில் ஏதாவது லாப நட்டங்கள் ஏற்படும் பட்சத்தில் இதை மறுக்கின்ற தமிழ் தலைமைகள் இதற்கு பொறுப்புக் கூறியாகவேண்டும் பொறுப்பெடுத்தேயாக வேண்டும்.
ஆகவே இன்று இடம் பெறுகின்ற பேச்சு வார்த்தையின் ஊடாக எதிர்காலத்தில் 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
இதில் ஒரு சிலருக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். சுயாட்சி அற்ற விடயங்களாக இருக்கலாம். 13 வது திருத்தச் சட்டம் தமிழர்களுக்குரிய நிரந்தர தீர்வு அல்ல. ஆனால் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை 35 வருடங்களில் பிற்பாடு அமல்படுத்த முயற்சிப்பது என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் அதனை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
@athavannews 13வது திருத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்! #news#athavan#updats