உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என அதற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
ஆணைக்குழு தொடர்பாக சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை கேட்டறிந்து, அதற்கு அமைவாக அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதை சிவில் சமூகப்பிரதிநிதிகள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்தனர்.
இதேவேளை ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்றும் இச்செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்மூலம் மாற்றம் ஏற்படுவதற்கும் காலம் எடுக்கும் என்றும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த விடயத்தில் நடுநிலையாகவே தாம் செயற்படுவோம் என தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார்.
இதேநேரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கும் பின்னணியில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்கு இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் திட்டமிட்டுள்ளது.