மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார். இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லுமாறு நான் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கின்றேன்.
நாம் தேர்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. நாளை தேர்தல் நடந்தால்கூட நாம் முகம் கொடுக்கத் தயாராகவே உள்ளோம்.
மக்கள் இன்று போராட்டங்களில் ஈடுபடுவதில்லை தான். ஏனெனில், வீதிகளில் இறங்கி போராடுவதற்கு பதிலாக தங்களின் வருமானத்தை உயர்த்தும் வழிகளை பார்க்கலாம் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், மக்களிடம் உள்ள கோபம் அப்படியே தான் உள்ளது என்பதை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. தற்போது சிலர், ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்ததாக வரும் என்று கூறுகிறார்கள்.
கூறும் அவர்களுக்கே தெரியும், பொதுத் தேர்தல் ஒன்று தான் அடுத்து நடைபெறும் என்று. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் விற்க முடியாத குப்பைக் கூடமாகிவிட்டார்.
இனியும் இவரை வைத்து அரசியல் செய்ய முடியாது. ஜனாதிபதியும் விரைவில் வீழ்ந்துவிடுவார். எனவே, தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராகுங்கள்.
ஏனெனில், இப்போது மக்கள் தொடர்பாக கவலைப்படும் ஆளும் தரப்பினர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானத்தின்போது அவருக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள்.
மக்களை பாதுகாக்க யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது இறுதியில் தெரியவரும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.