மாணவி ஒருவரின் தண்ணீர்ப் போத்தலில் சக மாணவர்கள் சிறுநீரை நிரப்பிய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையொன்றிலே கடந்த வெள்ளிக்கிழமையன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று மாணவர்கள் சிலர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தண்ணீர் போத்தலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர்.
அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பாடசாலை பையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் வகுப்பறைக்குத் திரும்பிய மாணவி, தண்ணீர் போத்தலைத் திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்தார். இதனையடுத்து மாணவர்கள் சிலர் தனது தண்ணீர் போத்தலில் சிறுநீரை நிரப்பிய விடயம் அவருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்தபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. இதனையடுது்து பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
இவ் வன்முறை போராட்டம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.