பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கறுப்புத் துணியால் மூடிய சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து அறிவித்திருந்தார்.
இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்ததோடு இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் யோர்க் ஷையர் (Yorkshire) பகுதியில் உள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர்.
அத்துடன் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரைப் பாதுகாப்பு படை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இச்சம்பவம் இடம்பெற்ற வேளை பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் தனது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.