‘சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும், நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது‘ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
”இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், அனைத்து நாடுகளினதும் உதவி தேவைப்படுகிறது.சர்வதேச நாடுகளின் முதலீடுகள் தேவைப்படுகிறது. நாம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்.
நாம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதானிகளுடன் பேசும் போதெல்லாம், நம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வருமாறுதான் அழைப்பு விடுக்கிறோம்.ஏனெனில், இந்த அரசாங்கம் சரியான பதில் ஒன்றைக் கூறாமலேயே தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது.
நிதியில்லாத காரணத்தினால் அன்றி, வாக்குகள் கிடைக்காத காரணத்தினால்தான் அரசாங்கம் தேர்தலை பிற்போட்டுள்ளது என்பது சிறு பிள்ளைக்குக்கூட தெரியும்.அடுத்தாண்டுகூட தேர்தலை நடத்தும் எண்ணம் இவர்களுக்கு கிடையாது.அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதால் மட்டும், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.