ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என்று அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட், தம்புள்ளை மற்றும் ஹிரிவடுன்ன ஆகியவற்றை சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர் – ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், மற்றும் பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் காற்றின் தரப் பாதுகாப்பு நிலையை அறிக்கை அளிப்பதற்கான அவசரகால பதில் செயல் திட்டம் ஒன்றை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றாடல் அமைச்சு, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கனிமப்பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தரவுத்தளக் கட்டமைப்பு மூலம் தடுப்புப்பட்டியலில் சேர்க்கும் நடைமுறையையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுரங்கங்கள் மற்றும் கனிமச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை திருத்தம் செய்யப்பட்டு, ஆய்வு அனுமதி நடைமுறைக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள கனிம வளங்களில் முதலீட்டாளர்கள் நேரடியாக, தரகர்களின் தலையீடு இல்லாமல் முதலீடு செய்வதற்கு வசதியாக மேலும் புதிய ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய காலநிலை மாற்றக் கொள்கையை உருவாக்குதல், தேசிய கனிமக் கொள்கையை உருவாக்குதல், இலங்கைக்கான தேசிய குளிரூட்டும் கொள்கையை உருவாக்குதல் போன்ற பல்வேறு கொள்கைகளை தயாரிக்கும் பணி, இந்த ஆண்டு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளாகும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.