தற்போது இருக்கும் வறட்சி நிலைமையால் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நாம் எவருக்கும் அஞ்சாமல் அதனை மேற்கொள்வோம் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சமனல வாவியிலிருந்து மின்சாரத்துக்கு நீரை வழங்குவதானது அவசர கொள்வனவிற்காக அல்ல.
அதை தடுக்கவே நாம் இவ்வளவு காலம் நீரை முகாமைத்துவம் செய்து நீரை வழங்கி வருகிறோம்.
ஜுலை 30 ஆம் திகதி நீர்ப்பாசன அமைச்சு நீர்முகாமைத்துவ திணைக்களத்திடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க, நாம் அதிகளவு நீரை வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
ஒக்டோபர் 15 ஆம் திகதிவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மின்சாரத்தை வழங்க முடியும். மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையும் கிடையாது.
மார்ச் மாதம் மின்சாரத்தை கொள்வனவு செய்யுமாறு மின்சார சபை தெரிவித்தது. ஆனால், நாம் மாற்று வழிகளை கையாளுமாறு வலியுறுத்தியிருந்தோம்.
அதற்கு இணங்க 10 மெகா வோட் டீசல் ஜெனரேட்டரை மத்துகமவிலும், 30 மெகா வோட் ஜெனரேட்டரை ஹம்பாந்தோட்டையிலும் பொறுத்தி, தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் மின்சார சபைக்கு நீர்ப்பற்றாக்குறை பிரச்சினை இருப்பதாக நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்திருந்தது.
தற்போது இருக்கும் வரட்சி நிலைமை காரணத்தினால் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நாம் எவருக்கும் அஞ்சாமல் அதனை மேற்கொள்வோம்.
யார் என்ன சொன்னாலும் மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் எந்த தயக்கத்தையும் காட்டாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.














