வறட்சியான காலநிலை காரணமாக 21 நீர் விநியோக அமைப்புகளின் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த நீர் விநியோக அமைப்புகளில் கண்காணிப்பு முறைமையின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படுவதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.
இதனால் குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, பண்டாரவளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏனைய 41 நீர் வழங்கல் அமைப்புகளின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதோடு நீர் ஆதாரங்களில் பாயும் நீரின் அளவும் குறைவடைந்து வருவதாக அனோஜா களுஆராச்சி மேலும் தெரிவித்தார்.
அதன் காரணமாக நீர் விநியோக முறைமைகளில் தொடர்ச்சியான நீர் விநியோகத்தைப் பெற்றுக் கொள்வதற்கான உத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடுகள் அல்லாத தேவைகளுக்கு நீரை பயன்படுத்துவதை தவிர்த்து, வீட்டு தேவைகளுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.