ஆடி மாதம் :
சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரிய பகவான், தெற்கு திசையில் தனது ரதத்தை செலுத்தும் மாதமாகும். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சூரிய பகவான் மாறும் காலமே ஆடி மாதமாகும். இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாள் ஆடி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. எப்போதும் ஆடி அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும்? யாரெல்லாம் இருக்க வேண்டும்? என்பது போன்று தான் மக்களுக்கு சந்தேகம் வரும்.
இரண்டு அமாவாசைகள் :
வழக்கமாக ஒரு மாதத்தில் ஒரு அமாவாசை, ஒரு பௌர்ணமி தான் வரும். ஆனால் சில மாதங்களில் அபூர்வமாக இரண்டு அமாவாசைகள், இரண்டு பௌர்ணமிகள் வரும். ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால் அதை மல மாதம் என்றும், இரண்டு பௌர்ணமிகள் வந்தால் அதை விஷ மாதம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படி இந்த ஆண்டு ஆடி மாதம் இரண்டு அமாவாசைகள் வருகிறது. அதனால் எந்த அமாவாசை நாளை ஆடி அமாவாசை நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் இருக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எது ஆடி அமாவாசை ?
ஆடி முதல் தேதியான ஜூலை 17 ம் தேதியும், ஆடி 31 ம் தேதியான ஆகஸ்ட் 16 ம் தேதியும் அமாவாசைகள் வருகின்றன. இதனால் எதை ஆடி அமாவாசையாக கணக்கில் எடுத்துக் கொண்டு விரதம் அனுஷ்டிப்பது ? எந்த நாளில் நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ? இரண்டு அமாவாசைகளிலும் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டுமா? என்ற குழப்பமும் கேள்வியும் எழுந்துள்ளது.
ஆடி அமாவாசையில் குழப்பம் :
இந்த ஆண்டு ஆடி முதல் நாளே அமாவாசையும் சேர்ந்து வருகிறது. அதிலும் கூடுதல் சிறப்பாக மாதப்பிறப்பு, தக்ஷிணாயன புண்ணிய காலம், அமாவாசை ஆகிய மூன்று புண்ணிய காலங்களும் ஆடிப்பிறப்பு நாளில் சேர்ந்து வருகின்றன. ஆடி மாதத்தில் வரும் இரண்டு அமாவாசைகளும் சிறப்பானது. இரண்டிலும் விரதமிருந்து, தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானது என சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் முதலில் வருவதே நித்ய அமாவாசை என்பதால், அதையே ஆடி அமாவாசையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார்கள்.
சாஸ்திரம் என்ன சொல்கிறது ?
ஆனால் ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசையோ அல்லது பௌர்ணமியோ வந்தால் முதலில் வருவதை விட்டு விட்டு, இரண்டாவதாக வருவதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும் என்றும், இதுவே விரதம், தர்ப்பணம், தானம் அளிப்பதற்கும் ஏற்ற நாள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
‘ பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய’
என சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, பூர்வம் எனப்படும் முதலாவது திதியை, த்யக்த்வா என்றால் விட்டு விட வேண்டும். பரம் என்ற பின்னால் வருவதை க்ராஹ்ய – எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருள்.
எனவே ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும், ஆடி 31 ம் தேதி வரும் அமாவாசையை சிறப்பான ஆடி அமாவாசை நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு, கடல், நதிகள், குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் கொடுத்து பித்ருக்களின் ஆசியை பெற வேண்டும்.