சர்ச்சைக்குறிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் , முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணி தொடர்பான பாடிட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களத்தினர் சமர்ப்பித்தனர் .
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை இம்மாதம் 31 ஆம் திகதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ” அகழ்வு பணிக்காக முல்லைத்தீவு கச்சேரிக்கு இதற்கான நிதி கிடைக்கப் பெறாத நிலையில் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மன்றில் பாதீட்டினை தாக்கல் செய்து அகழ்வு பணியினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். பேராசிரியர் புஷ்பரெட்ணம்அவர்களும் இந்த அகழ்வு பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்து இருந்த நிலையில் நிதி கிடைக்காத அடிப்படையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட முடியாதுள்ளது.
எனவே இந்த வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் அத்தோடு இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத பிரதேச செயலாளர் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச சபையினர் மின்சார சபையினர் அடுத்த தவணை நீதிமன்றத்தில் கட்டாயம் பிரசன்னமாகி அகழ்வு பணியினை மேற்கொள்வதற்கான ஆவண செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
@athavannews














