இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தை, நிலவின் தென் துருவத்தில் நாளை மறுநாள்(23) தரையிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நாளன்று சந்திரயான் வெற்றிகரமாகத் தரையிரங்குமா என்ற ஆர்வம் இந்திய மக்களிடம் மாத்திரமல்லாது சர்வதேச நாடுகள் மத்தியிலும் வேரூன்றியுள்ளது.
இதேவேளைசந்திரயான், நிலவு குறித்த நான்கு புதிய படங்களை அனுப்பி உள்ளதாகவும் இப்புகைப்படங்கள் சந்திரயானை தரையிறக்குவதற்குறிய சரியான பகுதியை முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் எனஇஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ”பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த 5ஆம் திகதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ள லேண்டர் சாதனம் தனியாக பிரிந்தது.
பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள ரோவர் வாகனத்தை சுமந்துள்ள விக்ரம் லேண்டர் சாதனம் தற்போது நிலவை சுற்றி வருகிறது. நிலவில் இருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 134 கி.மீ., சுற்று வட்டப் பாதைக்குள் லேண்டர் சாதனம் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
நிலவில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ., மற்றும் அதிகபட்சம் 100 கி.மீ., துாரத்தில் இருக்கும்போது லேண்டர் சாதனம் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இந்த இலக்கை எட்டியதுடன், லேண்டர் சாதனத்தின் வேகம் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு, நிலவின் மேற்பகுதியில் மாலை 6:04 மணிக்கு தரையிறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு இஸ்ரோ அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.