ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதியான இர்ஷாத் அகமதுவின் சகோதரர் பஷீர் அகமது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி சுதந்திரதினத்தினை அனுஷ்டித்துள்ளார்.
இர்ஷாத் அஹ்மத், கடந்த ஆண்டு ஒக்டோபரில், தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ‘தீவிரவாதியாக’ அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது சகோதரர் பஷீர் அகமது தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 77ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேசிய பாடல்களை பாடக்கற்றுக்கொடுத்து நிகழ்வை முழுவதுமாக இரசித்து கொண்டாடினார்கள்.
இந்நிலையில், கருத்துவெளியிட்ட பஷீர் அகமது, ‘ஹம் ஹிந்துஸ்தானி ஹை’ அதாவது, நாடு அவருக்கு சொந்தமானது என்று கூறியதோடு, அவனால் (இர்ஷாத்தால்) என் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டார். எங்கள் தந்தையும் அவரை பிரிந்துள்ளார். அவரால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நாடு எங்களுடையது. நாங்கள் இந்தியர்கள்;. இந்தக் கொடி நமது பெருமை என்றும் குறிப்பிட்டார்,
சில தகவல்களின்படி, இட்ரீஸ் என்ற இர்ஷாத் அகமது தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார். ஆனால் அவரது சகோதரர் பஷீர் மூவர்ண தேசிய கொடியைப் பிடித்து ஏற்றி, தான் இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இறையாண்மைக்கு சவால் விடும் நபர்களுக்கு எதிரானவர் என்றும் செய்தி அனுப்புகிறார்.
அத்துடன், இர்ஷாத் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு அரசாங்கத்திடம் முறையிட்ட பஷீர், தனது சகோதரரின் சித்தாந்தத்தை வெளிப்படையாக விமர்சித்தார், மேலும் இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்று கூறியதோடு இதை வலுவிழக்கச் செய்யாமல் இந்த தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இர்ஷாத் அகமதுவின் குடும்பத்தினர், அரசபடையிடம் சரணடைந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்குமாறு அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் மகனைத் திரும்பக் கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் முறையிட்டனர், ஆனால் அந்தச் செயற்பாடு இன்னமும் நிகழவில்லை. அத்துடன் டோடா மாவட்டத்தில் இருந்து 119 தீவிரவாதிகள் தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.