தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக கொண்டு, அதிலிருந்து நாம் முன்னேறி மேலும், அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இந்நிலையில், எமது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை விளங்கிக்கொண்ட உலக வல்லரசான அமெரிக்கா இன்று சில நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் கட்சிகளை அழைத்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது புத்திசாலித்தனமானது என்ற கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விடயமானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீர்க்கதரிசனமான தூர நோக்கு கொண்ட அரசியல் தீர்வு முயற்சிக்கான ஓர் அங்கீகாரமாகவே நாம் பார்க்கின்றோம்.
ஏற்கனவே சர்வதேசம் எமது பிரச்சினையில் தலையிடாது எமது பிரச்சினைகளுக்கான தீர்வை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியபோது சில அரசியல் கட்சிகளும் ஆய்வாளர்களும் அதனை பொருட்படுத்தாது ஒரு மலினமான கூற்றாக விமர்சனம் செய்திருந்தனர்.
ஆனால் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் சர்வதேசம் ஒரு வரையறைக்கு மேல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருந்தார்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.