அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தமக்கு ஆதரவை வழங்குமாறு இம்முறை எந்தவொரு உயர்மட்ட தூதுக்குழுவையும் அரசாங்கம் அனுப்பாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு பதிலாக அந்தந்த நாடுகளுடன் தொடர்புகொள்வதற்கு ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியின் கைகளில் அதனை ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையியில் கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தோற்கடிப்பதற்கு தேவையான எண்ணிக்கையைப் பெற முடியாது என்ற யதார்த்தத்திற்கு அரசாங்கம் வந்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை ஆராய வெளிநாட்டின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துள்ளது.
அடுத்த அமர்வு செப்டம்பர் 11 ஆம் திகதி தொடங்கி ஓக்டோபர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.