பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரான்ஸில் அண்மையில் வருடாந்திர தெரு நாடக விழாநடைபெற்றுள்ளது. இவ்விழாவில் யுவதியொருவர் மேலாடையின்றிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து அவரிடம் மேலாடையை அணியுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாகக் கூறி குறித்த யுவதி மேலாடையை அணிய மறுத்துள்ளார். அத்துடன் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை உள்ளது எனக் கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீதுபொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் குறித்த யுவதிக்கு ஆதரவாக ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆண்கள், பெண்கள் என பலரும் மேலாடை இல்லாமல் வீதிகளில் நடந்து சென்றனர். அத்துடன் அவர்கள் தங்களது உடல்களில் ஆண், பெண் இருவரும் சமம் என்பன போன்ற வாசகங்களை எழுதிக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். முதலில் அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் சிலர் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். இதன்போது நாட்டின் தேசிய கொடியையும் சிலர் தீயிட்டு எரித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அங்கு தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இச்சம்பவத்தால் பிரான்ஸில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.