அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பியுடனனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இந்த அரசாங்கமானது எதிர்க்கட்சிகளுக்குள் பிளவினை ஏற்படுத்த தற்போது முயற்சித்து வருகிறது.
அரசாங்கத்தின் இந்த முயற்சியை தோற்கடித்து, ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் எதிர்க்கட்சித் தரப்பினர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் என்ற வகையில் நாம் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை.
எவ்வாறாயினும், இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும்.
இப்போதுவரையான பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே நாம் முயற்சித்து வருகிறோம்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பி.க்கும் மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் பல்வேறு கொள்கைகள் இருக்கலாம்.
இதுதான் அரசியல்.
இவ்வாறான கொள்கைகள் உடையவர்களை இணைப்பதுதான் தற்போது அவசியமாக உள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது எமக்கு சவாலாக இருக்காது.
ஏனெனில், மொட்டுக் கட்சியோ ஐக்கிய தேசியக் கட்சியோ அடுத்து நிச்சயமாக ஆட்சியமைக்காது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.