இந்தியாவின் தொடாச்சியான அர்ப்பணிப்பான விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தத்தால் இந்த வெற்றி உறுதியானது.
அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா தனது முயற்சியில் வெற்றி கண்டுள்ளது.
இந்தியா தனது முயற்சியில் ஒரே தருணத்தில் வெற்றியைத் தனதாக்கவில்லை. சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்டப் பயணங்களை அடுத்து நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணிக்க ஆரம்பித்தது.
சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லாண்டர் கலன் கடந்த 17ஆம் திகதி விடுவிக்கப்பட்டு, படிப்படியாக லாண்டருக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் குறைக்கப்பட்டு குறைந்தபட்சம் 25கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் பயணிக்க வைக்கப்பட்டது.
பின்னர் நிலவின் தரையிலிருந்து 150மீற்றர் உயரத்துக்கு லாண்டர் கொண்டுவரப்பட்டதோடு, சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தெரிவு செய்யப்பட்டு பூச்சிய நிலையில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு அதில் வெற்றியைக் கண்டனர்.
இந்தவெற்றியின் பின்னால் ஒரு கூட்டுமுயற்சி உள்ளது. அதில் தமிழர்களின் பங்கும் கணிசமானது. சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு பயணத்திற்கு முதன்மையாக செயற்பட்டவர் விஞ்ஞானி எஸ்.சோம்நாத். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஏற்கனவே இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். சந்திரயான்-3 மட்டுமின்றி ஆதித்யா-எல்1 முதல் சூரியன் மற்றும் ககன்யான் போன்ற திட்டங்களுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரா எனப்படும் பி.வீரமுத்துவேல். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ரயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரின் மகன் ஆவார். முன்பு இவர் இஸ்ரோவின் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தின் துணை இயக்குனராக பணியாற்றினார்.
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்து, பின்னர் உயர் படிப்பிற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரத்தில் தும்பாவிற்கு அருகில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர். இவர் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் மார்க்-ஐஐஐ ஐ உருவாக்கியதில் பங்காற்றி உள்ளார்.
யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர் எம்.சங்கரன் தற்போது தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலைநிலை உணர்தல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் கிரக ஆய்வு ஆகியவற்றில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கைக்கோள்களை உருவாக்கும் குழுவின் தலைவராக உள்ளார்.
இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் இஸ்ரோவுக்காக இந்த மையத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றமை முக்கியமானது.
புகழ்பெற்ற விஞ்ஞானியான ஏ.ராஜராஜன் ஸ்ரீPஹரிகோட்டாவின் முக்கிய விண்வெளி துறைமுகமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். அவர் லேப் இன் தலைவராகவும் உள்ளார்.
ககன்யான் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி உள்ளிட்ட இஸ்ரோவின் விரிவடையும் ஏவுகணை தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களைத் தவிர, சந்திரயான்-3 குழுவில் இயக்குநர் மோகன் குமார் மற்றும் வாகன இயக்குநர் தோமஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் சுமார் 54 பெண் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் நேரடியாக பணியில் ஈடுபட்மையும் குறிப்பிடத்தக்கது.