எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் உரிமைகளையும் நடைமுறைச் சூழலையும் புறக்கணிக்கும் வகையில் பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பரீட்சை நவம்பரில் நடத்தப்பட்டால், மாணவர்கள் பாரிய அநீதிக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நவம்பர் மாதத்தில் பரீட்சையை திட்டமிடுவதால், இரண்டாவது தடவையாக பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அவகாசமே கிடைக்கும் என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் பாடப்பிரிவுகளை மாற்றி மீண்டும் பரீட்சைக்கு அமர்கின்ற மாணவர்களுக்கு இந்த கால அவகாசம் போதாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.