க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
2022ஆம் கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குத் தெரிவான 60 மாணவர்களும், 2021 கல்வியாண்டில் 06 பாடப்பிரிவுகளில் தேசிய மட்டத்தில் முதல் 05 இடங்களைப் பிடித்த 30 மாணவர்கள் உட்பட மொத்தம் 90 மாணவர்களும் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.
06 உயர்தரப் பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு தலா 50,000 ரூபா ரொக்கப்பரிசுகளும், ஏனைய இடங்களுக்கு தலா 25,000 ரூபா ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, கல்வி தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதன்போது மாணவர்கள் பலர் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி அவை தொடர்பாக அவதானம் செலுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.
சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் ஜனாதிபதியுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் காலை உணவு மற்றும் பகலுணவு என்பன வழங்கப்பட்டதோடு தாமரை கோபுரம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் என்பவற்றை மாணவர்கள் இலவசமாக பார்வையிட ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடும் செய்திருந்தது.
இளைஞர் விவகாரம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் ரந்துல அபேவீர இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.