சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதல் மீளாய்வு இன்று ஆரம்பமாகும் என்றும் இரண்டாவது தவணையைப் பாதுகாப்பதற்கும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் இந்த மீளாய்வு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததால் பொருளாதார மீட்சிக்கான வலுவான நிலையில் இலங்கை இருக்கும் என்பதோடு 2024 இல் வளர்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைக்க ஏதுவாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கை மத்திய வங்கி, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.