ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்தியதாக மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க, இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட அரசாங்கத்தினால் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு அவுஸ்ரேலிய ஃபெடரல் பொலிஸ், அமெரிக்காவின் எப்.பி.ஐ. மற்றும் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களும் கிடைத்தாக தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் இதுவரை 79 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹிமாலி அருணதிலக்க கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வுப் பணிப்பாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை 2023 ஜனவரி 12 அன்று உயர் நீதிமன்றம் வழங்கியது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அத்தோடு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேநேரம் இறையாண்மையுள்ள எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.