யாழ், திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணையில் குறித்த பாட்டியும், பேத்தியும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர் என்பதும், சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பாட்டியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ”குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரைக் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தினால், அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாட்டியைக் கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.