உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் சரத் பொன்செகா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் அங்கத்துவர்களாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவை நியமித்திருந்தார்.
அதன் அறிக்கை ஒன்று இருக்கின்றது. அதில் சரத் பொன்செகா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் அங்கத்துவர்களாக இருக்கின்றனர்.
அந்த அறிக்கையும் நாடாளுமன்றத்தில் இருக்கின்றது.
இந்த அறிக்கை தொடர்பாக அவதானம் செலுத்த முடியவில்லை என்றால், அடுத்து முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.
அரசு அல்லாத நிறுவனங்கள் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் கொண்டு வந்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக உலகில் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்கள் இருக்கின்றன.
குறித்த நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தெளிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என நான் நம்புகின்றேன்.
இந்த விடயம் எப்போதும் தேர்தல் ஒன்று நெருங்கும் போது பேசப்படும் அதன் பின்னர் அமைதியாகிவிடும்.
இதனை அரசியலாக மாற்ற முடியாது.
ஏதாவது ஒரு நாட்டின் அரச சார்ந்த தீவிரவாதிகள் குறித்து ஆராயும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பார்களாயின் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.